Tuesday, October 21, 2008

இந்து நாளிதழின் சர்ச்சைக்குரிய கட்டுரை- ஒரு குறியியல் அணுகல்

-தமிழவன்

இந்து பத்திரிகையில் நடுப் பக்கத்தில் வந்த கட்டுரை ஒன்று பற்றிய குறியியல் ஆய்வு இது. கட்டுரையின் தலைப்பு : "தமிழ்வெறியால் ஏற்படக் கூடிய ஆபத்து" ஆங்கிலத்தில் The Dangers of Tamil Chauvinism. இக்கட்டுரை வெளியான தேதி அக்டோபர் 14-ஆம் தேதி (2008).

குறியியல் ஆய்வு என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு அதுபற்றிய பரிச்சயம் செய்ய வேண்டும். அதற்கு முந்தி அக்கட்டுரை ஏன் முக்கியம் என்பது பற்றி ஓரிரு வரிகள்.

அக்டோபர்-15ஆம் தேதி அக்கட்டுரையை எதிர்த்துக் கோவையில் பெரியார் திராவிடக் கழகத்தினரும், சில வழக்கறிஞர்களும், மாணவர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதை இந்து நாளிதழ் தெரிவிக்கிறது. காவலர்கள் 147, 285, 447, 336, 506 ஆகிய செக்ஷன்களில் எதிர்ப்பாளர்கள் மீது வழக்குத் தொடுத்துள்ளனர். இந்திய பத்திரிகையாளர் யூனியன், கோயம்புத்தூர் பிரஸ் கிளப், மற்றும் சென்னை பிரஸ் கிளப் ஆகிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளவர்களைக் கண்டித்துள்ளன.

குறியியல் பற்றி நான் ஒரு நூலும், சில கட்டுரைகளும் எழுதியுள்ளேன். குறியியல் என்றால் ஆங்கிலத்தில் 'ஸெமியாடிக்ஸ்' என்று கூறுவர். இது ஒரு அறிவியில் துறை. அதாவது குறிகள் பற்றிய அறிவியல். உலக உண்மைகளைக் குறிகளாக இவ்வறிவியல் துறையினர் பார்ப்பார்கள். நான் தமிழ்ப் பேராசிரியனாகையால் 'நச்சினார்க்கினியரின் ஸெமியாடிக்ஸ்' என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் வீ.அரசு தவிர யாரும் அக்கட்டுரை வெளிவந்து பல வருடங்கள் ஆகிவிட்ட போதும் இன்றுவரை ஏதும் என்னிடம் பேசியதில்லை. 'தமிழும் குறியியலும்' என்று ஒரு நூலும் எழுதியுள்ளேன். தமிழில் நாடகம் பற்றிய ரவியின் குறியியல் நூல் ஒன்றும் வந்துள்ளது.

இந்து நாளிதழ் இலங்கைத் தமிழர்களின் போராட்டம் பற்றி ஒரு குறிப்பிட்ட நோக்கிலேயே செய்திகளை வெளியிடும் பத்திரிகை என்பது எல்லோருக்கும் தெரியும். இலங்கை அரசின் செயல்பாடுகளை ஆதரிக்கும் இதழ். எப்படியாவது சிங்கள அரசு வெற்றி பெற்றுவிடவேண்டும் என்ற எண்ணத்தை ஆசிரியத்துவ நிலைப்பாடாகக் கொண்ட பத்திரிகை அது என்பது பரவலான கருத்து. அதே நேரத்தில் இந்திய இடதுசாரிகளின் கருத்தை அடியொற்றிய கருத்துகளை இவ்விதழில் பார்க்கமுடியும். பி.ஜே.பி. சார்ந்த அமைப்புகளை இவ்விதழ் விமர்சிக்கும் என்றும் கிறிஸ்தவ கோயில்களைத் தாக்குவதைக் கண்டிக்கிற இதழ் என்றும் பலருக்கும் தெரியும். முரளிதர் ரெட்டி என்பவர் இலங்கை அரசின் துண்டறிக்கைகளைச் செய்திகளாக இந்து இதழில் தொடர்ந்து நிரப்புவதை இந்து நாளிதழ் வாசகர்கள் அறிவர். தமிழ் நிலப்பகுதிகளை இலங்கை அரசு போரில் கைப்பற்றுவதைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன.

குறியியல் ஆய்வு குறிகளின் தாரதம்மியத்தையும், குறிகளின் வகைகளையும் பிரித்து அறிய முயலும்.

மாலினி பார்த்தசாரதி என்ற பெண்மணியால் எழுதப்பட்ட இக்கட்டுரை மொத்தத்தில் 14 பத்திகளைக் கொண்ட கட்டுரை. அனைத்திந்தியாவுக்கும் செல்லும் கட்டுரையாக இந்து நாளிதழ் இதனை அச்சிட்டுள்ளது. வெறும் பிராந்தியப்பக்கங்களில் அச்சான கட்டுரையல்ல. தமிழ்நாட்டுக்கு மட்டும் எழுதப்பட்ட கட்டுரையும் அல்ல.

இக்கட்டுரை தீவிரவாதம் என்ற சொல்லை, மூன்றாவது பத்தியில், இஸ்லாமிய ஜிகாதிகளோடு இனம் கொள்கிறது. முதல் பாராவில் சமீபத்தில் இந்திய நகரங்களில் வெடிகுண்டு வைத்தவர்களோடு இணைக்கிறது. பின்பு எல்.டி.டி.இ.யின் தீவிரவாதத்தை ஆதரிக்கும் ம.தி.மு.க மற்றும் பி.எம்.கே என்ற பாட்டாளி மக்கள் கட்சியை இணைக்கிறது. தீவிரவாதம் என்றால் பயங்கரவாதம் ஆகும். ஆங்கிலத்தில் Terrorism. எல்லோருக்கும் இலங்கைத் தமிழர்கள் இந்துக்கள் என்பது தெரியும். இந்த அமைப்பினருக்கு இலங்கை முஸ்லீம்களோடு சில பிரச்சினைகள் எழுந்தன என்பதும் தெரியும். முதல் பாராவிலும், பதினான்காம் பாராவிலும் காஷ்மீரில் பிரிவினை கேட்பவர்களும், இலங்கையில் பிரிவினை கேட்பவர்களும் ஒன்றே என்று கட்டுரையாசிரியர் கூறுகிறார். குறியியல் கூற்றுகளை அடிப்படையாக வைப்பதைவிட (சொற்களுக்கு (Signifier) அதாவது குறிப்பானுக்கு உள்ள குறிப்பீடு (Signified) பற்றிக் கவலைப்படுவதன் மூலம்) கூற்றின் அர்த்தத்தை அடிப்படையாகக் கொள்ளும். இந்த இரண்டு பத்திகளின் குறிப்பீடு இங்கு நான் கூறும் விஷயம்தான். தீவிரவாதத்தைக் கையாள்பவர்கள் தீவிரவாதிகள். இவர்களுக்கு கண், மூக்கு, கால் இவை வித்தியாசமாக இருக்கும். இவர்கள் வரலாற்றில் வராதவர்கள். வரலாற்றுக்கும் அப்பால் இருப்பவர்கள். எப்போதும் வெறுக்கத்தக்கவர்கள். இவர்கள் ஒரு குணரூபம் (abstraction). இப்போது விஷயம் ஓரளவுக்குத் தெளிவாகும்; அதாவது தீவிரவாதிகள் என்று சிலர் இல்லை; யாரைத் தீவிரவாதிகள் என்று அழைக்கிறோமோ அவர்களே தீவிரவாதிகள். அழைக்கிறவர்கள் பலசாலிகளானால்- அதிகமானவர்கள் ஆனால், அழைக்கப்படுபவர்கள் தீவிரவாதிகள். புஷ்ஷின் அமெரிக்காவிற்கு ஈராக் அன்று தீவிரவாதி. இந்தியாவிற்கு காஷ்மீர் பிரிவினை கேட்பவர்கள் தீவிரவாதிகள். இலங்கைக்கு தனிஈழம் கேட்பவர்கள் தீவிரவாதிகள். மாலினி பார்த்தசாரதியின் கட்டுரைக்குள் இறுக்கிக் கட்டப்பட்டுள்ள குறிகளைச் சற்றுத் தளர்த்தினால் நமக்குக் கிடைக்கும் அர்த்தங்கள் நம்மைப் பயமுறுத்துகின்றன.

'தீவிரவாதிகள்' என்ற சொல்லுக்குப் புதுத்தொனி, புதுச் செயல்பாடு இக்கட்டுரைக்குள் உருவாகிறது. அதாவது வெறுப்பிலிருந்து உருவாவதுதான் இச்சொல். இனி, இச்சொல்லை யார் மீதும் ஒட்டலாம். ஐந்தாம் பத்தியில் எதிரணிகளான தி.மு.க.வும், அ.தி.மு.கவும் மாயமாய் ஓரணிக்குள் மாலினியால் கொண்டுவரப்படுகின்றன. புலிகள் மீது எடுக்கப்பட்ட மிலிட்டரிச் செயல்பாட்டால் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 'பைத்தியம் பிடித்தது போலாகி (Work themselves into a frenzy)Õ ஒரே அணிக்குள் பிடித்துத் தள்ளப்படுகின்றனர். புலிகளும், அதன் ஆதரவாளர்களும் 'தமிழ் வெறி உணர்வை' (Tamil Chauvinist Sentiment) பயன்படுத்தி, டெல்லி மீது கொலம்போவின் படை எடுப்புக்கு எதிரான நிலைப்பாடு எடுக்க வலியுறுத்துகின்றனர். 'வெறி உணர்வு' 'பைத்தியம் பிடித்தது' போலாதல் ஆகிய சொற்கள் இன்னொரு, அறிவுக்கப்பாற்பட்ட வலயத்தை உருவாக்குகின்றன.

இந்தப் பைத்தியம், தீவிரவாதம், வெறி உணர்வு போன்ற சொற்கள் இரண்டு முறை குறிப்பிடப்படும் 'ராஜீவ்காந்தி படுகொலை' என்ற நிகழ்ச்சியோடு பொருத்தப்படுகின்றன. வெறி, கொலை, தீவிரவாதம், முஸ்லீம் ஜிஹாதிகள் என்பதான ஒரு கதை சொல்லல் (narrative) கட்டப்படுகிறது. மாலினி பார்த்தசாரதியின் வெறுப்பை மையக்கருவாக (plot) கொண்ட கட்டுரையில் 15-10-08 அன்று இந்து இதழின் ஆசிரியர் கடிதம் எழுதுவோர், மாலினியின் கதை சொல்லலுக்கு (கதையாடலுக்கு) ஏற்ப நாயகர்களாகவும், (Heroes) வில்லன்களாகவும் இரு பிரிவாகப் பிரிக்கப்படுகின்றனர். அதாவது மாலினியின் கட்டுரையை சபாஷ் என்று கூறி, கரகோஷம் செய்பவர்கள் நாயகர்கள். மாலினியின் கதையாடலை ஏற்காதவர்கள் வில்லன்கள். அவர்கள் இருவரின் கருத்தை ஏற்காதவர்கள் மாலினியின் வெறுப்புக் கதையை உருவாக்கும் இருவித பாத்திரங்கள். இரு எதிரும் புதிருமான ஈரிணை எதிர்வுகள் (Binary opposites) இவர்கள்.

நான்காவது பத்தியில் முஸ்லீம் பிரிவினைவாதம் பாக்கிஸ்தான் மிலிட்டரி ஜெனரல்களையும் இஸ்லாம் தீவிரர்களையும் ((Militants) ஓரணியாக மாற்றுகிறது. இந்த அணிக்கு எதிராக இந்திய தேசிய பிரக்ஞை (Indian National consciousness) நிறுத்தப்படுகிறது. பாக்கிஸ்தான் மிலிட்டரி ஜெனரல்களும், இஸ்லாம் தீவிரர்களும், காஷ்மீர் பிரிவினை கேட்பவர்களை 'சுதந்திர போராட்ட வீரர்கள்' என்கின்றனர். இப்போது கதைக்குள் பூடகமாக செயல்படும் ஒரு உபகதை நுழைகிறது. அது வெளிப்படையாய்ச் சொல்லாமல் பூடகமாக வைக்கப்படுகிறது. பா.ம.க, ம.தி.மு.க, மற்றும் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய தமிழகத்தின் எல்லா முக்கியமான அரசியல் கட்சியும் புலிகளை 'சுதந்திர போராட்ட வீரர்கள்' என்று கருதுகின்றன என்பது இக்கட்டுரையாசிரியரின் 'கூறாக் கூற்று'

ஆக ஒரு கொலையைச் சுற்றி எழுதப்படும் மர்மக் கதையில் மாலினி கட்டுரையாசிரியராகவும், கொலையைக் கண்டுபிடிக்கும் டிடெக்டிவாகவும் இருவேறு வேஷங்கள் அணிந்து, தன் துப்பாக்கியை, தமிழகத்தின் எல்லாக் கட்சிகள் மீதும் குறிபார்க்கிறார். குறியியல் என்ற அறிவியல் உலகமெங்கும் பிரபலமானது. கியுபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் தாடியை உதிர வைக்க அமெரிக்க சி.ஐ.ஏ உளவு நிறுவனம் முயற்சி செய்தபோதுதான். சாதாரண விஷயம் (இங்கு மயிர்) கூட முக்கியமானதாகும் சமாச்சாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அதுபோல் ரோலான் பார்த் என்ற பிரஞ்சு இலக்கிய விமரிசகர், ஆடைகள், ஹோட்டல் மெனு போன்றவற்றையும் குறியியல் ஆய்வு செய்தார். Elements of semioties என்ற பெயரில் குறியியல் பற்றிய பாட புத்தகம் ஒன்றை ரோலான் பார்த் எழுதியிருக்கிறார். ஆனால் Mythologies (பௌரானிகம்) என்ற பெயரில் வந்த குறியியல் புத்தகம் தான் இன்னும் அதிகம் பிரபலமானது.

குறியியலில் இல்லாதது உள்ளதாக உயிர்பெற்று வரும் அடிப்படை ஒன்று உண்டு. அதற்கோர் உதாரணம்- தமிழ் வெறி பற்றிய இந்த நாளிதழின் கட்டுரையைப் படித்த ஒரு வாசகரின் எதிர்வினை. 16.10.2008 இந்து நாளிதழ் வாசகர் கடிதத்தை எழுதியுள்ள பி.அமரேசன் பட்டுசாமி (திருவண்ணாமலை): இலங்கையில் நடக்கும் போரை பிரிவினைக்கான காஷ்மீர் கலகத்துடன் ஒப்பிடமுடியாதென்கிறார். பங்களாதேஷில் 1971இற்கு முன்பிருந்த நிலையோடும் கொஸவோவுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பிருந்த நிலையோடும், இன்றைய பாலஸ்தீனிய சூழ்நிலையோடும் ஒப்பிடலாம் என்கிறார் இந்த வாசகர். ஆனால் கட்டுரையாசிரியர் இப்படி ஒரு விளக்கத்தைச் செய்ய விரும்பவில்லை. ஏனெனில் தீவிரவாதம் என்பது அவரது விருப்பப்படி மட்டுமே விளக்கம் பெற வேண்டும் என்பது குறியியல் வாசிப்பு ஒன்றின் மூலம் வெளிப்படும் உண்மையாகும். ஆனால் இந்து நாளிதழ் ஸ்ரீரங்கம் வி.மஹாலிங்கம் கருத்தை அரண் செய்வது போல் புகழ்பட வேண்டியதும் துணிகரமானதுமான கட்டுரையை வெளியிட்டிருக்கிறதாம்.

இந்து நாளிதழ் தமிழர்கள், தமிழ்மொழி போன்ற விஷயங்களில் எப்படி நடந்து கொண்டுள்ளது என்ற வரலாறு பேராசிரியர் நம்பி ஆரூரன் எழுதிய 'தமிழ்ப் புத்தொளி காலமும் திராவிட தேசியமும்' என்ற ஆங்கில நூலில் தெளிவாக்கப்படுகிறது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தைச் சார்ந்த பத்தாண்டுகளில் மெட்ராஸ் யுனிவர்சிட்டியின் செனட் போன்ற உயர்மட்ட விவாதங்களில் தமிழை சமஸ்கிருதத்தைப் போலக் கருதக்கூடாது என்று கருதியவர்களின் பக்கம் இந்து நாளிதழ் நின்றிருக்கிறது. சமஸ்கிருதம் மட்டுமே செம்மொழி என்றும் தமிழ் ஒரு 'வெர்ணாக்குலர்' மட்டுமே என்றும் இந்து நாளிதழ் கருதி வந்திருக்கிறது.

தமிழ் வெறி பற்றிய இந்து நாளிதழின் கட்டுரையும் இந்து நாளிதழ் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் கொள்கையை மேலும் வலுவுள்ளதாக்கியுள்ளது.


ந‌ன்றி: உயிரோசை (20 10 2008)

8 comments:

Anonymous said...

இதை ஆங்கிலத்தில் எழுதி இந்து நாளிதழுக்கு மறுப்புக் கட்டுரையாக பேராசிரியர் தமிழவன் அனுப்ப வேண்டும். இந்து அதைப் பதிப்பித்தால் நல்லது. ஒரு வார காலத்துக்குள் பதிப்பிக்கவில்லையெனில், "இந்துவுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அது பதிப்பிக்கபடவில்லை" என்ற குறிப்புடன் எந்தெந்த அச்சு/இணைய இதழ்களில் வெளியிட முடியுமோ அங்கெல்லாம் வெளியிட்டு இந்துவின் அய்யோக்கியத்தனத்தை பரவலாக வாசகர்களுக்கு தெரியபடுத்தவேண்டும்.

எனக்கு பேராசியர் தமிழவனை தெரியும் என்பதால் அவரை மின்னஞ்சல் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதை வலியுறுத்துகிறேன். அவரை அறிந்த பிற நண்பர்களும் அவ்வாறு செய்யுமாறு கோருகிறேன்.

Anonymous said...

'அன்புத்தொல்லை' அனானி அவ‌ர்க‌ளுக்கு,
நீங்க‌ள் தேனீயிலிருந்து எடுத்துப்போட்ட‌ முழுப்ப‌திவின் இணைப்பை ம‌ட்டும் இங்கேயிட்டிருக்கின்றேன். ப‌திவை வாசிக்க‌ விரும்புப‌வ‌ர்க‌ள் அங்கே சென்று வாசிக்க‌வும்.
http://www.thenee.com/html/221008-2.html

ராஜ நடராஜன் said...

சாதாரண வாசிப்புக்கும் அப்பால் ஒளிந்து கிடக்கும் வார்த்தைகளை அணுகிய முறை எனது பார்வைக்கு புதிது.பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

Anonymous said...

Please click on the following link to read this.

http://www.thenee.com/html/241008-6.html

Anonymous said...

Pl do it as the anony said, so that we can counter attack them, otherwise they will do this type matters again.

We all also stop buy "The Hindu" and publish in the site also.

இளங்கோ-டிசே said...

முத்லாவ‌து ம‌ற்றும் இறுதியாய் பின்னூட்ட‌மிட்ட‌ அநாம‌தேய‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு,
நீங்க‌ளிருவ‌ரும் குறிப்பிடும் விட‌ய‌ம் ந‌ல்ல‌தொரு விட‌ய‌மே. எனினும் 'நூற்றாண்டுக்கால ப‌ராம்ப‌ரிய‌மிக்க‌' இந்துப் ப‌த்திரிகையைத் தொட‌ர்ந்து வாசித்து வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு இந்துவின் 'ப‌த்திரிகா த‌ர்ம‌ம்' ந‌ன்கு தெரியும். த‌மிழ‌வ‌ன் ஆங்கில‌த்தில் இந்த‌க்க‌ட்டுரையை எழுதிய‌னுப்பினால் கூட‌, அதை ஒரு வாசக‌ர் க‌டித‌மாய் த‌மிழ‌க‌ப்ப‌திப்புக்குரிய‌தாய் ம‌ட்டும் சுருக்கி பிர‌சுரித்துவிடும் சாம‌ர்த்திய‌ம் இந்துக் குழும‌த்திற்குத் தெரியும் (முழு இந்திய‌ப்ப‌திப்புக்குமாய் பிர‌சுரிக்காம‌ல்). நாம் 'இந்து' சார்ந்து இய‌ங்க‌வேண்டிய‌தில்லை; எம‌க்கு வாய்க்க‌க்கூடிய‌ த‌ள‌ங்க‌ளில் இந்துவின் அயோக்கிய‌த்த‌ன‌ங்க‌ளை தோலுரித்துக்காட்டுவ‌தே உக‌ந்த‌ முறையாக‌ இருக்குமென‌ நினைக்கின்றேன் (த‌மிழ‌வ‌னும் அப்ப‌டியே நினைக்க‌வும்கூடும்).
......
அநாம‌தேய‌ ந‌ண்ப‌ர்/க‌ள் எடுத்துப்போட்ட‌, பார்த்த‌சார‌தியின், வீ.ஆன‌ந்த‌ச‌ங்க‌ரியின்... தேனீயில் வ‌ந்த‌ க‌ட்டுரைக‌ளைப் ப‌ற்றிச் சொல்வ‌த‌ற்கு ஒன்றுமில்லை. கால‌ம‌றிந்து சாம‌ர்த்திய‌மாய் எழுதும்/அறிக்கை விடும் அறிவுஜீவித்த‌ன‌ங்க‌ளால் அங்கே போருக்குள்ளிருக்கும் ம‌க்க‌ளுக்கு பெரிதாய் எதுவும் ந‌ன்மை விளைய‌ப்போவ‌துமில்லை.
....
இந்தியா அதிகார‌வ‌ர்க்க‌த்தின் காலை ந‌க்கிக்கொண்டு திரியும் ஆன‌ந்த‌ச‌ங்க‌ரியைக் கூட‌ இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ளில் ம‌ன்னித்துவிட‌லாம். ஆனால் அண்மையில் ஒரு கூட்ட‌த்தில் அறிவுஜீவி ராஜ‌ன் கூல், 'ஈழ‌த்தின் எதிர்கால‌ம் இனியென்ன‌?' என்ற‌ கேள்விக்கு, ஒன்று ஈழ‌த்த‌மிழின‌ம் அழிய‌ப்போகின்ற‌து அல்ல‌து இந்தியாவின் த‌லையீடு வேண்டும் என்ற‌போது, அட‌ நாச‌மாய்போன‌வ‌ர்களே, 'முறிந்த‌ ப‌னை'யின் 87க‌ளில் நிக‌ழ்ந்த‌தில் அநேக‌மான‌வ‌ற்றை ஆவ‌ண‌ப்ப‌டுத்திக்கூட‌ இன்னுமா இந்தியாவின் மோக‌ம் போக‌வில்லை என்றுதான் என‌க்குள் எண்ண‌த்தோன்றிய‌து.
......
தேனியிலிருந்து க‌ட்டுரைக‌ளை எடுத்துப்போட்ட‌வ‌ர்க‌ளுக்கு, வின‌வின் 'ஈழம் - இந்தியா முதுகில் குத்துவது ஏன்?' (http://vinavu.wordpress.com/2008/10/23/eelam1/) க‌ட்டுரையை வாசிக்க‌ப் ப‌ரிந்துரைக்கின்றேன். சில‌ இட‌ங்க‌ளில் முர‌ண்ப‌டுகின்றேனே த‌விர‌ நிறைய‌ இட‌ங்க‌ளில் நான் உட‌ன‌ப‌டுகின்ற‌ க‌ட்டுரைய‌து. 83க‌ளில் ஏன் ப‌ல‌வேறு ஈழ‌ப்போராளிக்குழுக்க‌ளுக்கு இந்தியா உத‌விய‌து என்ப‌திலிருந்து, இராஜீவின் கொலை ஒரு சாட்டே த‌விர‌ அது நிக‌ழாவிட்டால்கூட‌ இந்திய‌ அதிகார‌வ‌ர்க்க‌ம் த‌மிழ‌ர்க‌ளின் போராட்ட‌த்தை எந்த‌க்கால‌த்திலும் ஆத‌ரிக்க‌ப்போவ‌தில்லை என்ப‌தே ய‌தார்த்த‌ம் என்ப‌துவ‌ரை வின‌வு விரிவாக‌ எழுதியிருக்கின்றார்.. ஆனால் அதேவேளை, சில‌ அர‌சிய‌ல்க‌ட்சிக‌ளின் சுய‌லாப‌ங்க‌ளை மீறி த‌ன்னார்வ‌மாய் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்காய் மீண்டும் முகிழ்ந்தெழும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் உண‌ர்வுக‌ள் ‍அதை ம‌த்திய‌ அர‌சு ம‌திக்காவிட்டால் கூட‌ ‍ முக்கிய‌மான‌து என்றே நினைக்கின்றேன் (வின‌வு அதை வேறுவித‌மாய்ப் பார்க்கின்றார்). எனெனில் 2002/3ல் புலிக‌ள் யாழ்ப்பாண‌த்திற்கான‌ விநியோக‌ங்க‌ளைத் துண்டித்து ஒரு முற்றுகைக்குத் த‌யாரான‌போது (அது எந்த‌ள‌வில் சாத்திய‌மாக‌ இருந்த‌து என்ற‌ இன்னொரு கேள்வியிருந்தாலும்), இந்தியா த‌ன‌து போர்க்க‌ப்ப‌ல்க‌ளை நாக‌ப‌ட்டின‌த்திற்கு(?) ந‌க‌ர்த்தி, யாழிலிருந்த இல‌ங்கை இராணுவ‌த்தைக் காப்பாற்ற‌ப்போவ‌தாய் ம‌றைமுக‌ அழுத்தத்தை புலிக‌ளுக்குக் கொடுத்திருந்த‌து. இன்றைய‌ த‌மிழ‌க‌த்தின் எழுச்சியான‌து ஈழ‌த்தில் போரை நிறுத்த‌க்கூடிய‌வ‌ள‌வுக்கு அத்த‌கைய‌ ஒரு பெரிய‌ அழுத்த‌த்தை ஏற்ப‌டுத்தாது போனாலும், தொட‌ர்ந்து ஈழ‌த்தில் த‌மிழ்ம‌க்க‌ள் அழிக்க‌ப்ப‌ட்டுக்கொண்டுபோனால் வெளியிலிருந்து த‌ட்டிக்கேட்ப‌த‌ற்கு குர‌ல்க‌ள் இருக்கின்ற‌தென்ற‌ நெருக்குவார‌த்தை இல‌ங்கை அர‌சுக்கு கொடுக்கும். அதே ச‌ம‌ய‌ம், க‌னடா/அய்ரோப்பா நாடுக‌ளிலே த‌மிழ‌ர்க‌ளை ம‌ட்டுமில்லை, வெள்ளையின‌த்த‌வ‌ர் உள்ளிட்ட‌ இன்ன‌பிற‌ரையே காசு கொடுத்து த‌ன‌து ப‌ர‌ப்புரைக்காய் பாவிக்கும் இல‌ங்கை அர‌சு, ஏதோவொருவ‌கையில் த‌மிழ‌க‌த்து எழுச்சியையும் குழ‌ப்ப‌வே முய‌ற்சிக்கும். மேலும் எள் என்ற‌முன்ன‌ரே எண்ணெய் கொண்டுவ‌ர‌ பிரிய‌ப்ப‌டும் இந்து ராம், சுப்பிர‌ம‌ணிய‌ சுவாமி, சோ த‌ர‌வ‌ழிக‌ள் இருக்கும்போது இல‌ங்கை அர‌சுக்கும் கொண்டாட்ட‌ந்தான்.
......
ஈழ‌த்தில் இர‌ண்டு த‌ர‌ப்பாலும் வெற்றி கொள்ள‌ப்ப‌ட‌முடியாத‌ போரில், இனி போர் த‌விர்ந்த மாற்று வ‌ழியை இர‌ண்டுத‌ர‌ப்பும் நேர்மையுட‌ன் அணுகினால‌ன்றி ஈழ‌ப்பிர‌ச்சினை தீர‌ப்போவ‌தில்லை. அல்ல‌து இர‌ண்டு த‌ர‌ப்பில் எந்த‌த் த‌ர‌ப்பு வெற்றிகொண்டாலும், வெற்றியைக் கொண்டாட‌ முடியாத‌ அள‌வுக்கு இர‌ண்டு த‌ர‌ப்புமே போராடட‌த்திற்கான‌ நியாய‌ப்பாட்டை இழ‌ந்துவிட்ட‌தென‌த்தான் சொல்ல‌வேண்டியிருக்கிற‌து.

Pot"tea" kadai said...

டிசே,
மாலினி பார்த்தசாரதியின் இக்கட்டுரை சென்னையின் முதல் காலையில் வாசித்தேன். என்னைப் போன்ற சாமானிய்னுக்கே மிகவும் எரிச்சலுட்டிய கட்டுரை. அது மட்டுமல்லாமல் அடுத்தநாள் அதை ஆதரித்து எழுதியதாக வெளிவந்த வாசகர் கடிதங்கள் அதைவிடக் கொடுமையானதாக இருந்தது.கட்டுரை தமிழீழ ஆதரவுக்கு எதிரானதாக மட்டுமின்றி இல்லாத தமிழ்நாட்டில் இல்லாத அல்லது நீர்த்துப் போன தமிழ் வெறியை இருப்பதாக உருவகப்படுத்தி அதற்கு எதிரான ஒரு பிரச்சாரத்தை உருவாக்குகிறது. இதைத் தான் பார்ப்பனத் தந்திரம் என்றழைக்கிறோம்.இக்கட்டுரையையும் "சோ"மாறியின் கட்டுரையையும், செயலலிதாவின் அறிக்கையையும் பார்த்தோமானால் சொல்லிவைத்து வெளியிட்டது போல் இருக்கும். மேலும் ஹியுமன் ரைட்ஸ் விசயங்களை கம்பேர் செய்து அரசியல் கட்சிகளை கேள்வியெழுப்பியவர் சிங்களப் பேரினவாத அரசின் தமிழர் படுகொலைகள் அப்பட்டமாக ஆதரித்தே எழுதுகிறார். கஸ்மீர் விவகாரத்தையும் ஈழத்தையும் கம்பேர் செய்கின்ற இவர் இந்து நாளிதழின் முந்தைய (80களிலும், ரஜீவ் படுகொலைக்கு முந்தைய 90களிலும்) கஸ்மீர தலையங்கங்களைப் படித்ததுண்டா என்று தெரியவில்லை. இதன் மூலம் பத்திரிகை தர்மம் எனப்படும் ஒரு பொருளையே ஏளனப்படுத்தியதல்லாமல், இந்து நாளிதழின் நிலைப்பாடு பற்றியே பல கேள்விகள் வைத்துக் கொண்டு இந்திய கொள்கைகளற்ற அரசியற்கட்சிகளை கேள்வியெழுப்புவது கேலிக்குரியதாகும். ஆண்ட்டி செமிடிஸம் என்பது போல இந்துவும் மாலினி பார்த்தசாரதியும் ஆண்ட்டி டமிலிசம் என்ற ஒரு பதத்தை தற்குறியாக ஒரு குறியியல் பார்வையிலேயே பார்க்கிறார்கள்.

அன்றைய தினம் மாலினி பார்த்தசாரதியைக் கண்டிருந்தால் நிச்சயமாகக் கொன்றிருக்கக் கூடிய மனோபாவத்திலிருந்தேன்.

இளங்கோ-டிசே said...

பின்னூட்ட‌ங்க‌ளுக்கு ந‌ன்றி ராஜ் ந‌ட‌ராஜ‌ன் & பொட்'டீ'க‌டை.
...
ச‌த்யா, மாலினி பார்த்த‌சார‌தியிற்கு ம‌ட்டும‌ல்ல‌, வாஸ‌ந்தி போன்ற‌வ‌ர்க‌ளும் இப்ப‌டித்தான் அவ்வ‌ப்போது தாங்க‌ள் வித்தியாச‌மாய் சிந்திக்கின்றோம் என்று நீலிக்க‌ண்ணீர் வ‌டிப்பார்க‌ள். குஷ்பு விவகார‌த்தில் திருமாவ‌ளவ‌ன் போன்ற‌வ‌ர்க‌ளுக்கே பெரியாரைப் ப‌ற்றி வ‌குப்பெடுத்த‌வ‌ர் அல்ல‌வா வாஸ‌ந்தி? அப்த்த‌மாய் திருமாவ‌ள‌வ‌ன் குஷ்பு விவ‌கார‌த்தில் ந‌ட‌ந்துகொண்டிருந்தாலும், அதை பெரியாரை முன்வைத்து அ.மார்க்ஸ் திருமாவ‌ள‌வ‌னின் க‌ருத்தை எதிர்ப்ப‌த‌ற்கும், வாஸ‌ந்தி எதிர்ப்ப‌த‌ற்கும் வித்தியாச‌ங்க‌ள் உண்ட‌ல்ல‌வா? எப்போது த‌ங்க‌ளுக்கேற்ற‌வாறு கால‌ம் க‌னிகிற‌தோ அத‌ற்கேற்ற‌வாறு காய்க‌ளை ந‌க‌ர்த்தி த‌ங்க‌ளை அறிவுஜீவியாக்கும் சாம‌ர்த்திய‌த்தை இவ‌ர்க‌ளைப் போன்ற‌வ‌ர்க‌ளுக்குச் சொல்லியா கொடுக்க‌வேண்டும்?