Sunday, February 11, 2007

எலும்புக்கூட்டின் வாக்குமூலம்

-(கவிதைகள்) அநாமிகன்-
மதிப்புரை : ராஜமார்த்தாண்டன்



தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் எழுதத் தொடங்கிய அநாமிகனின் நாற்பத்து நான்கு கவிதைகளடங்கிய தொகுப்பு 'எலும்புக்கூட்டின் வாக்கு மூலம்.' போர்ச்சூழலில் 'எரியும் தேசத்திலிருந்து' எழுதப்பட்ட கவிதைகள் இவை. தொகுப்பின் முதல் கவிதையே ('நிலம் மீளுகை') சுதந்திரத் தாயகம் அடைந்துவிட்டதான கவிஞரின் தீர்க்கமான நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. அந்த நம்பிக்கை,

எல்லா விடியல்களும் / எல்லா
இரவுகளும் / சூறையாடப்பட்ட
பின்னரும் / சாம்பல்
மேடாக்கப்பட்ட / பின்னரும் / நீ
துளிர்ப்பாய் / நீ மிளிர்வாய் /
வீரியமிக்க உனது மனிதரின் /
நெஞ்சுறுதியில் / தவிரவும்
எதைக்கொண்டு / மனமாற

என்ற வகையிலானது.

அநாமிகனின் கவிதைகள் பலவும் ஒற்றைப் பரிமாணம் கொண்டவை. எளிமையானவை. அவரது சொற்களில், 'அரிதாரம் பூசாத வார்த்தை'களால் எழுதப்பட்டவை. ஆனால் யோசிக்கும் வேளையில், அந்த எளிமை ஒரு மாயத் தோற்றம் என்றும் சொல்லத் தோன்றுகிறது. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் 'இடைச்சிறுவனின் பயணம்' கவிதை. தொகுப்பின் சிறந்த கவிதைகளில் ஒன்று. இந்தக் கவிதையின் எளிமையின் பின்னிருக்கும் அனுபவ தரிசனம், பலரது கவிதைகளிலும் அபூர்வமாகவே காணக் கிடைக்கும் ஒன்று.

இந்தக் கவிதை, சாதாரண மனிதன் ஒருவனின் வாழ்க்கையைப் பற்றியது. 'மந்தையின் பிறப்பில் சிரிப்பும் / மந்தையின் பிரிவில் அழுகையுமே / இடைச் சிறுவனின் இரவும் - பகலும்.' வாழ்க்கைப் பயணத்தில் வேறெந்த அக்கறையும் அவனுக்கில்லை - வாய்க்கவில்லை - என்ற போதிலும் அவன் 'எதற்காகவோ காத்திருக்கிறான்.' ஆனால்,

'அவனுக்காய் / அற்புதங்கள்
எதுவும் நிகழவில்லை / எந்த
தேவதூதர்களும் /
காட்சியளிக்கவில்லை / எந்த
மீட்பர்களும் / பிறந்திருக்கவில்லை'

மனித குல வரலாற்றில் இத்தகை யோரே பெரும்பான்மையினர். ஆனால் வரலாறோ, சமூகமோ, இலக்கியமோ, இயக்கமோ இத்தகையோரைக் கணக்கி லெடுத்துக்கொள்வதில்லை. அந்தத் துக்கம், எளிமையான வார்த்தைகளின் பின் அழுத்தமாக உள்ளுறைந்திருப்பது தான் இந்தக் கவிதையின் சிறப்பு.

ஈழத்துக் கவிஞர்கள் பலரையும் போல் அநாமிகன் வார்த்தைகளை விரயமாக்கவில்லை. உதாரணத்துக்கு 'கி9' கவிதையைச் சொல்லலாம். ஈழத்தை இலங்கையின் பிற பகுதிகளோடு இணைக்கும் 'ஏ-9' நெடுஞ்சாலை, ஈழத்து மக்களின் வாழ்விலும் தாழ் விலும் இரண்டறக் கலந்தது. ('சாவும் வாழ்வும் நிறைந்திருந்த பெருந்தெரு' என்று தனது கவிதையொன்றில் சேரன் குறிப்பிடும் நெடுஞ்சாலை.)

A9 ஒரு கறுப்பு நிதி / குருதியும்
வியர்வையும் / கண்ணீருமாய்
சேர்ந்தோடும் நதி

A9 ஒரு ஜீவ நதி / கனவும்
வாழ்வுமாய் / நீண்டோடும் நதி

வீழ்த்தப்படாத நெஞ்சுறுதியுடனும்/
விடுதலை அவாவுடனும்/
எழுந்தொலிக்கும் / நீக்றோவின்
ஜீவ கானமாய் / நீண்டோடும் கரு நதி

மூன்று படிமங்கள் - காட்சிகள் - பார்வைகள் மூலமாக, 'ஏ-9' என்றழைக்கப்படும் அந்தப் பிரதான நெடுஞ்சாலையைச் சித்திரிப்பதன் மூலம் இன்றைய ஈழத்து மக்களின் அவலத்தையும் மன உறுதியையும் குறிப்பாலுணர்த்துகிறது.

இக்கவிதைகள் போர்ச் சூழலில் எழுதப்பட்டவை - அநாமிகனின் வார்த்தையில் 'விடுதலைப் பரணிகள்' -என்ற போதிலும் காதலின் கனிவு கூடிய மென்மனமும் கடலின் அழகில் மயங்கி நிற்கும் ரசனையுணர்வும் வெளிப்படாமலும் இல்லை. ('முறைசாரா முகவரிகள்', 'கடலின் அழகு.')

'இந்தக் கவிதைகள் தவிப்பையும் நெருக்கத்தையும் கொண்டிருக்கின்றன. இந்தக் கவிதைகளின் மையம் எத்தனிப்பு எனலாம். அநாமிகனின் கவிதைமொழி எப்போதும் எத்தனிப்போடுதான் இயங்குகிறது. ஆக அநாமிகனின் கவிதைகளை எத்தனிப்புகளின் மொழி அல்லது எத்தனிப்புகளின் வெளிப்பாடு அல்லது எத்தனிப்புகளின் விளைவு எனலாம்' என்கிறார் முன்னுரையில் கருணாகரன். அநாமிகனின் இத்தகைய கவிதைகளே ('பிரிவின் சங்கீதம்', 'எலும்புக்கூட்டின் வாக்குமூலம்', 'நிராசை', 'நிலம்மீள் தரிசனம்', 'கி9', 'ஆறு ஆறாமல் அழுகிறது', 'கடலின் அழகு', 'பயணம்', 'மூன்றாவது மனம்', 'இடைச்சிறுவனின் பயணம்', 'நீயிருக்கும் நான்', 'தேவை') அவரைக் கவிஞராக இனம்காட்டுகின்றன. மாறாக, கனவுகளும் நம்பிக்கைகளும் கருத்தியல்களாக மட்டும் வெளிப்படும் கவிதைகள் அவற்றுக்கான அங்கீகாரங்களுடன் நின்றுவிடும்.

ஒரு படைப்பாளி தான் வாழும் சமூகத்தை, தான் வாழும் காலத்தில் நின்று எதிர்கொண்டு எதிர்வினையாற்றுபவனாகவே இருக்கிறான். அவனது எதிர்வினை நேர்மையாகவும் உள்ளுணர்வு சார்ந்தும் சுதந்திரமாகவும் கலைத்துவமாகவும் வெளிப்படும்போது, காலம், நாடு, மொழி என்னும் எல்லைகளைக் கடந்தும் புதுமையுடன் நிலைத்திருப்பதை இலக்கிய வரலாறு காட்டும். அநாமிகனின் கவிதைகளில் சிலவேனும் அவ்வகையில் அமைந்திருப்பதே, அவரைக் கவனப்படுத்திப் பேச வைக்கின்றன.

கலைத்துவமாக வெற்றி பெறாத கவிதைகளிலும்கூட மிகையுணர்வோ, போலித்தனமோ இல்லையென்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அம்சம். யுத்த காலச் சூழலைப் பதிவு செய்யும் இத்தகைய கவிதைகளில் எளிதாகவே படர்ந்துவிடும் 'களிம்பு' அநாமிகனிடம் இல்லையென்பதும் அவரிடம் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

வெளியீடு:
அழகியல் கலாமன்றம்
கிளிநொச்சி.
முதல் பதிப்பு - ஜனவரி 2006
பக். 88. ரூ. 150

நன்றி: காலச்சுவடு

No comments: